ஒரு சமயம் மகாவிஷ்ணு பூதேவியின் அன்பில் மூழ்கியிருந்ததைக் கண்ட லக்ஷ்மி, பகவான் தன்மீது இவ்வளவு அன்பு செலுத்தவில்லையே என்று வருத்தப்பட்டார். அப்போது அங்கு வந்த துர்வாச முனிவரிடம் தனது வருத்தத்தைத் தெரிவிக்க, அவரும் பூதேவியை சந்திக்கச் சென்றார். இவர் வருவதை அறியாக பூதேவி, எழுந்து வரவேற்காததால் சினம் கொண்ட துர்வாசர், 'நீ லக்ஷ்மியின் உருவத்தைப் பெறுவாய்' என்று சாபமிட்டார். பூதேவி சாபவிமோசனம் கேட்க, தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ள இந்த க்ஷேத்திரத்தில் தவம் செய்யுமாறு கூறினார்.
அதன்படி தவம் செய்தபோது, ஒரு பங்குனி மாதம் பௌர்ணமி அன்று நதியில் நீராடும்போது மீன் வடிவில் இரண்டு குண்டலங்கள் கிடைத்தன. அவற்றைக் கையில் எடுத்தவுடன் பகவான் ப்ரத்யக்ஷமாக, அவருக்கே அந்த மகரக் குண்டலங்களை பூதேவி அளித்தார். அதனால் பகவானுக்கு 'மகர நெடுங்குழைக்காதன்' என்ற திருநாமம் ஏற்ட்டது. லக்ஷ்மியின் வடிவில் (ஸ்ரீபேரை) பூதேவி இங்கே தவம் செய்ததால், இந்த ஸ்தலத்திற்கு 'திருப்பேரை' என்ற பெயர் ஏற்பட்டது.
மூலவர் மகர நெடுங்குழைக்காதன் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் குழைக்காதுவல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார் ஆகிய திருநாமங்களால் வணங்கப்படுகின்றார். பிரம்மா, சுக்கிரன், ஈசாந்ய ருத்ரர் ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று.
நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
|